சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்ல

By Manikanda PrabuFirst Published Dec 20, 2023, 1:34 PM IST
Highlights

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

1965 ஆம் ஒன்றிய அமைச்சரவைக்குழு எடுத்த முடிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என விதி 377 இன் கீழ் நாடாளுமன்றத்தில் இன்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் விதி 377 இன் கீழ் ரவிக்குமார் எம்.பி. முன்வைத்த கோரிக்கைகளாவது: “09.02.2023 அன்று மாநிலங்களவையில்  எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர், ‘உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவேண்டும்’ என்று 21.05.1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார்.  உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழி தொடர்பாக ஒப்புதல் அளிக்கவோ,  மறுக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

Latest Videos

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே?

அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்க அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் எதையும் அளிக்கவில்லை. பாராளுமன்றத்தில்  சட்டம் இயற்றப்பட்டு  மாற்றப்படாவிட்டால் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அலுவல்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 348 (1) குறிப்பிடுகிறது. மேலும், உறுப்பு 348 (2), குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், இந்தி அல்லது வேறு மொழியை உயர்நீதிமன்ற அலுவல்மொழியாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 7, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை மாநில மொழியில் நடத்த அனுமதிக்கிறது. 

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்கள் ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தமும் இல்லாமல், தங்கள் மாநில மொழிகளைத் தங்கள் உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகக் கொண்டு இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், 1965 ஆம் ஆண்டு அமைச்சரவைக் குழுவின் முடிவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை முறைப்படி அறிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.

click me!