
தமிழகத்தில் போட்டி போடும் திமுக- பாஜக : தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் இடையேயான மோதல் அரசியல், கொள்கை, மற்றும் தேர்தல் அரங்கில் தொடர்ந்து உருவாகி வருகிறது. பாஜக, தமிழகத்தில் தனது செல்வாக்கை விரிவாக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் திட்டங்களை முன்னிறுத்தி, திமுகவை ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வலுவான நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்து திமுகவுக்கு கடுமையான சவால் விடுக்க முயற்சிக்கிறது.
அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணியானது திமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் களப்பணியை தொடங்கியுள்ளது. பல்வேறு முக்கிய நபர்களையும் பாஜகவில் இணைத்து வருகிறது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க காய் நகர்த்தப்படுகிறது. அந்த வகையில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் இன்று மதுரையில் நடைபெறும் விழாவில் ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி உட்பட பாஜகவில் 5ஆயிரம் பேரோடு இணையவுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கோட்ட பாஜக பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறுகையில், மதுரை வலையங்குளம் பகுதியில் இன்று நடைபெறும் விழாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி ராஜா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து 5000 இளைஞர்கள் பா.ஜ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
தென் மாவட்டத்தில் 10 பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் இரண்டாவது இடம் பிடித்தோம். அதன் மூலமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என கூறினார். இந்து அமைப்புகள் சார்பில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டில் மற்றவர்களைப் போலவே பா.ஜ.க.,வும் கலந்து கொள்கிறது. இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் விதமாகவே இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யாசேதுபதி, அரசியலில் நேர்மையும் தூய்மையும் இருக்க வேண்டும் என்பதால் பொது சேவையில் இருந்த நான் பா.ஜ.க.,வில் நேர்மையும் தூய்மையான அரசியலும் இருப்பதால் இணைகிறேன் என கூறினார்.