உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

By Raghupati RFirst Published Nov 12, 2022, 6:03 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை ஆகியுள்ளார்கள்.

1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி:

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ

2014ம் ஆண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 2014 பிப்ரவரி 14ம் தேதி முடிவெடுத்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை:

இதற்கிடையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதேபோல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் 6 பேரின் நன்னடத்தை தொடர்பான பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், இதில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு தமிழக அரசு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி இன்று விடுதலை ஆனார். மேலும் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்கள்.

இதையும் படிங்க..எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !

click me!