நவம்பர் 9க்குள் கரைக்கு திரும்புங்கள்… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 3:12 PM IST
Highlights

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் 9 ஆம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதுதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வரும் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் மஹாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மேற்கண்ட தேதிகளில் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.

click me!