
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பணியமர்த்தப்பட்ட 369 உபரி பேராசியர்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போராட்ட கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினர்களான கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து நேற்று பணிக்கு வந்தனர். பின்னர் கிளைத்தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:–
“தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 6 ஆயிரம் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் 369 பேர், மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், தமிழக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த நடைமுறை பேராசிரியர் நியமனத்திற்கு மாறாக அவர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளதை போல் உள்ளது. எனவே, அவர்களைத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மேலும் பல பேராசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது.
இவ்வாறு நியமிக்கப்படும் உபரி பேராசிரியர்களின் கல்வித்தகுதி, அரசு கல்லூரி ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு மாறாக உள்ளது. பணி மேம்பாட்டு நடைமுறைகளில் வேறுபாடுகள் உள்ளன. ஓய்வு பெறும் வயது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 60 ஆகவும், கல்லூரி பேராசிரியர்களுக்கு 58 ஆகவும் உள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்களில் பலர் தொலைதூர கல்விக்கூடத்தில் நிர்வாகப்பணியில் இருந்தவர்கள். அவர்களுக்கு கற்பித்தல் அனுபவம் மிகவும் குறைவு. இவர்களை அரசு கல்லூரிகளில் நியமிப்பதால், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்களை, அரசு கல்லூரிகளில் நியமிக்காமல், அரசு பல்கலைக் கழகங்களிலோ அல்லது பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலோ நியமிக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே பணி அமர்த்தப்பட்டவர்களையும் திரும்ப பெற வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கிளை செயலாளர் மாரிமுத்து, மண்டல செயலாளர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.