தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வருகிற வியாழக்கிழமை முதல் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும்,. ஒரு சில மாவட்டங்களில் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் வெப்பம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலை நேரத்தில் வீட்டில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. மேலும் வெப்ப காற்றும் தொடர்ந்து வீசுவதால் மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்திலும் வெயிலின் தாக்கம் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பினி பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். வெப்ப தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி மத்திய மற்றும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பகல் வேளைகளில் முக்கியமான வேலைகளை தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை முதல் வெப்ப அலை வீசும்
அதிகளவு தண்ணீர் பருகும்படியும், பருத்தி ஆடைகளை உடுத்தும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் தாக்கி வருகிறது. எனவே வரும் நாட்களில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் எனவும், வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார். சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் மாவட்டங்களில் மழை
டெல்டா மற்றும் வட தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் என தெரிவித்துள்ளவர்,தமிழக உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 40 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.