
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைசத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்குள்ள பணியாளர்களை கம்பெனி வேன் மூலம் அழைத்து வந்து, கொண்டு சென்று விடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேன் பெண் பணியாளர்களுடன், கம்பெனிக்கு புறப்பட்டது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு தனியார் கம்பெனி பஸ் ஊழியர்களுடன் சென்று கொண்டிரந்தது. அதன்பின்னால், காய்க்கறிக்களை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் பணியளார் ஒருவரை ஏற்றுவதற்காக வேன் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.
அதனை தொடர்ந்து வந்த காய்க்கறி வேன் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 25 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பஸ் மற்றும் வேனில் படுகாயமடைந்த ஊழியர்களை மீட்டனர்.
தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று, படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு, தனியார் வாகனம் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.