திருப்பூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; வரிசையில் நின்று தீர்வு கேட்டு முழக்கம்...

First Published Jun 22, 2018, 10:57 AM IST
Highlights
primary school Teachers demonstration in Tirupur


திருப்பூர்
 
திருப்பூரில் நடக்க இருந்த கலந்தாய்வு நடத்தப்படாததால் தொடக்கபள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

2018-2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டது. 

அதன்படி, கடந்த 11-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் தொடக்கக்கல்வி இயக்குனர் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார். 

அதில், "கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய எட்டு மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் அதிகமுள்ளன. எனவே, இந்த எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் இல்லை. 

ஆனால், இந்த மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெறலாம். 

ஏற்கனவே, பரிந்துரைக்கப்பட்ட மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணை வழங்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த ஆணை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியின் உத்தரவுப்படி கலந்தாய்வு நடைபெற்று வந்த பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் ஒட்டப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று கலந்தாய்வில் பங்கேற்க வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த ஆணையை பார்த்து, "வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று செல்ல முடியாததாலும், முன்னதாகவே இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை" என்று கூறியும் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியின் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டார தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கனகராஜா முன்னிலை வகித்தார். 

இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதன்பின்னர் பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். 

இதனையடுத்து, ஆசிரியர்களிடையே பேசிய கல்வி அதிகாரிகள், "இது கல்வித்துறை எடுத்த முடிவு. எங்களின் முடிவு அல்ல. அந்த முடிவின்படிதான் கலந்தாய்வு நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீர்வு கிடைக்காது என்று நொந்து கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் அங்கிருந்து வருத்தத்தோடு கலைந்து சென்றனர். 
 

click me!