
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்குப் பதில் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைத் தமிழக அரசு நிறைவேற்றியது.
இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் இருந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் இதனை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் மீண்டும் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி, ஆளுநரே வேந்தராகச் செயல்பட்டு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையே தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து, தமிழக அரசு இது குறித்துத் தனது சட்டத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா அல்லது சட்ட ரீதியான வேறு வழிகள் கையாளப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.