
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், வெட்டுப்பட்ட இளைஞர் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் பகுதியை சேர்ந்த சுராஜ் (34) என்பது தெரியவந்தது. இவரை அதே ரயிலில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் அவரை ரயிலில் இருந்து இறங்கியதும் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நந்தகோபால் (17), விக்கி என்கின்ற விக்னேஷ் (17) சந்தோஷ் என்கின்ற குல்லு (17), சந்தோஷ் (17) உள்ளிட்ட 4 சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகளில் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.