
பாமகவில் ராமதாஸ் தரப்புக்கும், அன்புமணி தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூட்டணி குறித்தும் கட்சியின் அனைத்து அதிகாரங்கள் குறித்தும் அவர் தான் முடிவெடுப்பார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடைசியாக பேசிய ராமதாஸ், கண்ணீர் சிந்தியபடி அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய ராமதாஸ், ''எனது அம்மா கனவில் வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். ஒரு பையன் என் கழுத்தில் துணையை இறுக்கி கொல்ல வேண்டும் என பதிவு போடுகிறான். அவனை கூப்பிட்டு அன்புமணி பதவி கொடுக்கிறார் என்று சொன்னேன். அதற்கு எனது தாய் நான் என்னப்பா செய்ய முடியும். நீ அப்படி அவனை வளர்த்து இருக்கிறாய் என்றார்கள்.
அதற்கு நான் ஆமாம் அம்மா நான் சரியாக வளர்க்கவில்லை. அன்புமணி என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிற மாதிரி குத்துகிறான். அவனுக்கு நான் என்ன குறை வைத்தேன். உலகத்தில் உள்ள தகப்பனை விட அவனுக்கு நான் அதிகம் செய்துள்ளேன். சில்லறை பையன்களை வைத்து அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார். சென்னையில் ஒரு மகன் தகப்பனை 20, 30 துண்டுகளாக வெட்டி கொலை செய்தார். என்னை தினம்தோறும் தூற்றுவதற்கு பதிலாக இப்படி செய்தால் கூட நிம்மதியாக போயிருப்பேன்.
95% பாமகவினர் என் பக்கம்
அன்புமணி பக்கம் இருக்கும் கும்பல் என்னையும், ஜி.கே.மணியையும் அவதூறாக பேசுகிறது. 95% பாமகவினர் என் பக்கம் தான் உள்ளனர். அன்புமணி பக்கம் வெறும் 5% தான் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டும். அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும். சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வர மாட்டேங்குது. ஏனென்றால் அன்புமணி நினைப்பு வந்து விடுகிறது. ஆனால் பாட்டாளி சொந்தங்கள், மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பதை பார்க்கும்போது தூக்கம் வந்து விடுகிறது புத்துணர்ச்சி வந்து விடுகிறார்'' என்றார்.
கூட்டணி குறித்து நல்ல முடிவு
தொடர்ந்து தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசிய ராமதாஸ், ''தேர்தலில் யாருடன் கூட்டனி வைக்கலாம் என நான் கருத்துகளை கேட்டு வருகிறேன். கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பேன். நான் அறிவிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாம் அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும்'' என்று தெரிவித்துள்ளார்.