அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்ஐஆர் வெளியானது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எப்ஐஆர் டவுன்லோட் செய்த செய்தியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரன் என்பவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம் எப்ஐஆர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஞானசேகரன் மட்டுமல்ல மேலும் ஒரு சார் இருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து யார் அந்த சார் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு குழு விசாரணை
இதற்கிடையே பாலியல் வழக்குகளில் எப்ஐஆர் வெளியாகக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், எப்படி எப்ஐஆர் வெளியானது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக விசாரிக்கவும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பல கட்ட விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் எப்ஐஆர் இணையதளத்தில் பதிவு செய்த போது உடனடியாக லாக் ஆகாத காரணத்தால் தான் வெளியாகி இருப்பதாக தமிழக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
நிருபர்களின் மொபைல் பறிமுதல்
இந்த நிலையில் எப்ஐஆர்ஐ யாரெல்லாம் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்ற பட்டியலை போலீசார் எடுத்துள்ளனர். அதில் பெரும்பாலும் குற்றப்பிரிவு செய்தி பீட் பார்க்கும் செய்தியாளர்கள் செய்திக்காக பதிவிறக்கம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அப்போது செய்தியாளர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துவிட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களுக்கு பிறகு தான் மொபைல் போன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதற்கு பின்னால் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளனர். காவல்துறை உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் சோர்ஸுகளாக இருப்பார்கள். பல வழக்குகளின் முக்கியமான தரவுகள் இருக்கும். அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுடனான சில முக்கியமான உரையாடல்களின் பதிவுகள் இருக்கும். இவற்றையெல்லாம் கைப்பற்றி பத்திரிக்கையாளர்களை மறைமுகமாக மிரட்டும் நோக்கமா என சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட விவரங்கள் கேட்பது ஏன்.?
பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்துவதென்றால் அவர்கள் முன்னிலையில் பரிசோதித்துக் கொண்டு அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் மாறாக பறிமுதல் செய்து தடய அறிவியல் துறைக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை என்ற பெயரில் தனிப்பட்ட விவரங்களை கேட்பது, குடும்பம், சொத்து ஆகியவை குறித்து விசாரிப்பது, எஃப்ஐஆரை வைத்து எவ்வளவு பணம் பார்த்தீர்கள் என கேள்வி கேட்பதெல்லாம் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.