
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில் மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மிகப்பெரிய அளவிலான கூட்டத்தை கூட்டி இபிஎஸ் ஆதரவாளரான ஆர்.பி. உதயகுமார் மாஸ் காட்டினார். ஓபிஎஸ் தொகுதியில் அதிகளவு கூட்டம் சேர்க்க வேண்டும் என மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோரை அழைத்து வரப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தார், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற செல்வாக்கை பார்த்து ஓ. பன்னீர்செல்வத்தால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அப்படியே மௌனம் சாதித்து இந்த இயக்கத்தை பின்னடைவு செய்ய விட்டார் என குற்றம்சாட்டினார். கொங்கு மண்டலத்தில் 100% வெற்றி அதிமுக பெற்றதாக தெரிவித்தவர். தென் மாவட்டங்களில் என்ன வெற்றியை பெற்றார் என கேள்வி எழுப்பினார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த போதும் தேனி மாவட்டத்தில் ஒரு பாலம் கூட கட்டவில்லை . ஆனால் அவர் மட்டும் வீடு மேல் வீடு காடு மேல் காடு, தீவு மேல் வாங்கி....... அதற்கு மேல் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. தன்னுடைய போடி தொகுதியை மட்டும் தான் சுற்றி வந்த நீங்கள் தலைவரா? சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தலைவரா? என கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில், அரசு அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட3 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்