
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்
தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 12 பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவர்களால் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், வடமாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, காதலனோடு சென்ற இளம்பெண் பாலியல் தொந்தரவு என தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவியை 12ஆம் வகுப்பு மாணவர்கள் கத்தியால் கழுத்தை அறுத்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவிக்கு கழுத்தில் கத்தி குத்து
கரூர் மாவட்டம் தரங்கம்பட்டி அருகே உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மாணவியை சக மாணவர் தனியாக அழைத்து சென்றுள்ளார். மாணவியும் நண்பன் என நம்பி உடன் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த மாணவர்களின் நண்பர்களும் அந்த இடத்தில் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி உதவி கேட்டு அலறியுள்ளார். இதனால் அங்கு இருந்த மற்ற நபர்கள் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதனால் மாணவியின் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டதால் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்துள்ள புகாரில், நேற்று இரவு தனது மகள் இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட நிலையில் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி விட்டதாகவும், எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறியவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.