பாமக வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை! முற்றிலுமாக செயலிழந்துபோன உளவுத்துறை! அன்புமணி விளாசல்!

Published : Jun 15, 2025, 11:26 AM IST
anbumani

சுருக்கம்

பாமக வழக்கறிஞர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

PMK Advocate Shot Dead: பாமக வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் சந்தேக மரணம் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவரை, மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் துப்பாக்கி கலாச்சாத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிட்டது என அன்புமணி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஓர் அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் இருக்கும் ஒருவருக்கே பாதுகாப்பற்ற நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது என்பது வெட்கக்கேடானது.

துப்பாக்கியால் சுட்டு பாமக நிர்வாகி கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி, கடந்த 11ஆம் தேதி இரவு இருசக்கர ஊர்தியில் அவரது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. அவர் உயிரிழந்தது விபத்து என்று காவல்துறையினர் கூறிவந்த நிலையில், அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக உள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். அவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவரை சிலர் துப்பாக்கியால் தலையில் சுட்டதால் குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சிலரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்கறிஞர் சக்கரவர்த்தி படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு சக்கரவர்த்தியின் நடமாட்டத்தை சிலர் கண்காணித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அருகில் இருந்த சிலருக்கு அவர்கள் தொடர்ந்து தகவல் அளித்து வந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் சக்கரவர்த்தி, அவரது வீட்டை நெருங்கும்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. சக்கரவர்த்தி, அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், அவர் ஒரு வழக்கறிஞராக கடமையை செய்ததற்காக கொல்லப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

உளவுத் துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதா?

வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் படுகொலை தொடர்பாக இரு கேள்விகளுக்கு தமிழக அரசும், காவல்துறையும் விடையளிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் படுகொலைக்கான சதித்திட்டத்தை ஒரே நாளில் தீட்டி நிறைவேற்றியிருக்க முடியாது. பல நாட்களாகவே இந்த திட்டம் வகுக்கப்பட்டு, புதன்கிழமை இரவு அங்கேற்றப்பட்டிருக்க வேண்டும். சக்கரவர்த்தி அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் என்பது மட்டுமின்றி, பிரபல வழக்கறிஞராகவும் இருந்த நிலையில், அவருக்கு எதிரான சதித்திட்டத்தை கண்டறிந்து முறியடிக்க காவல்துறை தவறியது ஏன்? தமிழக காவல்துறையின் உளவுத் துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதா? அல்லது கொலையாளிகளுக்கு துணை போனதா?

ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை

அடுத்ததாக, வழக்கறிஞர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான பிரபு என்பவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, அவர் காவல்துறை ஊர்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் காவல்துறை வாகனம் லேசாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமான துப்பாக்கி கொலையாளிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது? தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகியும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி புழக்கம்

அண்மையில் அரக்கோணம் பகுதியில் அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகராட்சி கவுன்சிலர் பாபு உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அதே பகுதியில்தான் இப்போது வழக்கறிஞர் சக்கரவர்த்தி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கள்ளத்துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி புழக்கத்தில் இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற வினா எழுகிறது. தமிழ்நாட்டில் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

துப்பாக்கி கலாச்சாத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு

அவற்றைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பண்ணைத் தோட்டங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக போலி குற்றவாளிகளை கைது செய்து திமுக அரசு தப்பிக்கப் பார்க்கிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிய, துப்பாக்கி கலாச்சாத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிட்டது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு, உடனடியாக பதவி விலக வேண்டும். சக்கரவர்த்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தரவேண்டும். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!