பாமக எம்.எல்.ஏ அருள் உள்பட 40 பேர் மீது பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!

Published : Nov 05, 2025, 03:32 PM IST
anbumani and pmk mla arul

சுருக்கம்

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பாமக எம்.எல்.ஏ அருள் உள்பட 40 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பாமக இரண்டு பிரிவுகளாக சிதறிக் கிடக்கிறது. இருவரும் தனித்தனி ஆதரவாளர்களை வைத்து கட்சியில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

அதாவது ராமதாஸ் அணியை சேர்ந்த பாமக எம்.எல்.ஏ அருள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வாழப்பாடி வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.

அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதல்

அவருடன் 10க்கும் மேற்பட்டவர்களுடன் கார்களில் வந்தனர். அப்போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட அன்புமணி ஆதரவாளர்கள் காரை நடுவழியில் மறித்து தாக்குதல் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ அருள் உடன் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலானது.

அருளை கொலை செய்ய சதி

அன்புமணி ரவுடி கும்பலை தூண்டி விட்டு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அன்புமணி வாழ்க என கூறிக்கொண்டு அந்த கும்பல் தாக்கியதாகவும் பாமக எம்.எல்.ஏ அருள் குற்றம்சாட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அன்புமணியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். 

மேலும் அன்புமணிக்கு கண்டனம் தெவித்த ராமதாஸ், அவரின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அருளை தாக்கிய கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

6 பேர் கைது; 40 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் சேலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதனடிப்படையில் அன்புமணி ஆதரவாளர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதே வேளையில் அருள் ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் கோபம் அடைந்த அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மோதல் சம்பவம் தொடர்பாக பாமக எம்.எல்.ஏ அருள் உள்பட 40 பேர் மீது காவல்துறையினர் வழக்க்குப்பதிவு செய்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!