
தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக மீது பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக உள்ளாட்சி துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சப்பணம் பெறப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரூ.888 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த கடிதம் தமிழகத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.ன்.நேருவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் நேரு, திமுகவினர் ஒவ்வொருவரையும் குறி வைத்து பாஜக தாக்கத் தொடங்கி உள்ளது.
பாஜக.வின் தாக்குதலுக்கு முதல் பலி நான் தான். இதனைக் கண்டு அஞ்சி ஓடிவிடக்கூடாது. தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவது திமுக நிர்வாகிகளுக்காகவோ, ஆட்சி அதிகாரத்திற்காகவோ கிடையாது. மக்களுக்காக தான். நாம் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த திட்டங்கள் மூலம் மக்கள் அனைவரும் பயன் அடைந்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து பயனடைய வேண்டும் என்றால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீர்காழியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த சட்டநாதர் கோவிலில் அமைச்சர் நேரு தரிசனம் மேற்கொண்டார்.