
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கோவை வந்துள்ளார். டெல்லியில் இருந்து ஆந்திரா சென்ற பிரதமர் அங்கு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்பு ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் சாமிநாதன் வரவேற்றனர்.
மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மோடியை வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இயற்கை வேளாண் மாநாடு நடக்கும் கொடிசியா மைதானத்துக்கு கார் மூலம் சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து கொடிசியா மைதானம் வரை பாஜகவினர், பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வள்ளி கும்மி நடனம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளின் இருபுறமும் திரண்டு இருந்த பாஜகவினர் மற்றும் மக்களுக்கு பிரதமர் மோடி புன்னகை ததும்ப கையத்தபடி சென்றார்.
விவசாயிகளுக்கு ரூ.18.000 கோடி நிதி
இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அங்கு சிறப்புரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் பி.எம்.கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விடுவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.