மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பதுதான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்
Be Well மருத்துவமனையின் இரண்டாவது Advance laser Proctology (அட்வான்ஸ் லேசர் ப்ராக்டலஜி) பயிற்சி வகுப்பு மற்றும் Proctology Support Group (ப்ராக்டலஜி சப்போர்ட் குரூப்) துவக்க நிகழ்ச்சி சென்னை இராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு “அட்வான்ஸ்ட் லேசர் ப்ராக்டலஜி” பயிற்சி வகுப்பு மற்றும் “ப்ராக்டலஜி சப்போர்ட் குரூப்” யை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூர் கலவரம் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். அனைவரது மனசாட்சியும் அசைத்துப் பார்க்கக் கூடிய ஜீரணிக்க முடியாத அளவில் மிகவும் மோசமாக பெண்கள் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். மணிப்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் வெளியில் மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறந்துள்ளார். இச்சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் பெண்களுக்கும், மனிதர்களுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்வி எழுகிறது.” என்றார்.
தமிழ்நாட்டுக்கு வாங்க; மணிப்பூர் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
அதிமுகவினர் முதலில் மணிப்பூர் சம்பவம் குறித்து பேசட்டும் என்ற அவர், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக மணிப்பூரில் நடந்த கொடூரத்தில் மனிதர்களுக்கு நடந்த நியாயத்தை பற்றி பேச வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாஜக பார்ப்பது போல் அனைத்தையும் தேர்தல் அரசியலாக மாற்றி விட முடியாது. மனிதர்களின் அடிப்படை வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படையான ஒன்று. அதன் அடிப்படையில் மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பதுதான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை.” என்றார்.