பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை வருகை புரிந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஏப்ரல் 9ஆம் தேதியன்று சென்னை வரும் பிரதமர் மோடி, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதே நாளில் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினரை ஆதரித்தும் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் இன்னும் இறுதி செய்யப்பட்டவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி மீண்டும் தமிழகம் வந்தார். அதனை தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதையடுத்து, மார்ச் 18ஆம் தேதி கோவையில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி சாலை பேரணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 6ஆவது முறையாக, தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.