
தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, கடந்த இரண்டு நாட்களாக 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கு இன்னும் 20 நாட்களே உள்ளதற்கு இடையே, கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாமலை பெற்ற தரவுகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி இன்று மீண்டும் சாடியுள்ளார்.
இந்த நிலையில், தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்கள் என பாஜகவையும், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே.. பதில் சொல்லுங்க மோடி.” என பதிவிட்டுள்ளார்.
Katchatheevu இந்திய மீனவர்கள் 6,184 பேரை கைது செய்த இலங்கை: வெளியுறவுத்துறை அமைச்சர்!
முன்னதாக, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன.” என குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.