
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் ரூ.2021.51 கோடி மதிப்பில் சர்வதேச அளவிலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி வைத்தார். ஆனால் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவில்லை. மொத்தமாக 950 படுக்கைகளுடனும் 10 தளங்களுடனும் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பனர் அருண் நேரு நாடாளமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாவத், “மதுரை எய்ம்ஸ் திட்டம் பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி இத்திட்டத்திற்கு ரூ.421 கோடி செலவிடப்பட்டு மொத்தப்பணியில் 42 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
மருத்துவமனையை முழுமையாகக் கட்டி முடிக்க அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுப்பானப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இது தொடர்பாக இணையத்தில் கருத்து தெரிவிக்கும் விமர்சகர்கள், இனி உதயநிதி செங்கல்லைத் தூக்கி பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்று விமர்சித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது செங்கல்லில் எய்ம்ஸ் என்று எழுதி இந்த ஒற்றைக் கல் தான் தோப்பூரில் இருந்தது. அதனையும் நான் எடுத்து வந்துவிட்டேன் எனக்கூறி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.