
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த கே.திருமுருகன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
“இராமேசுவரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. 1905-ல் தமிழகத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் பட்டன்கட்டியார், அந்தோணி பிள்ளை பட்டன்கட்டியார் ஆகியோர் இணைந்து, கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தை கட்டினர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். இவ்விழாவில், இரு நாட்டு மக்களும் கலந்துகொள்வர்.
கச்சத்தீவு உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. அந்தோணியார் ஆலய விழாவில் தமிழர்கள் பங்கேற்கலாம், கச்சத்தீவில் தங்கலாம், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழர்கள் கட்டிய ஆலயத்தின் ஒரு பகுதியில் இலங்கை அரசு புதிய கட்டடம் கட்டியுள்ளது. புதிய கட்டட திறப்பு விழாவில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞர், இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையேற்ற நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (டிசம்பர் 7) ஒத்திவைத்தனர்.