
களியக்காவிளை,
தேங்காப்பட்டணம் அருகே கேராளவிற்கு கடத்துவதற்காக, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரசு உணவுக்கிடங்கிடம் ஒப்படைத்தனர்.
தேங்காப்பட்டணம் பகுதியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் ஜான் பிரைட் ஆகியோர் தலைமையில் நேற்று அதிகாலையில் தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர்துறையில் உள்ள வீட்டில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஆளில்லாத அந்த வீட்டில் 22 மூட்டைகளில் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. பின்னர், 1 டன் ரேசன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேசன் அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்தவர்கள் யார்? கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, அரசு உணவு கிடங்கிற்கு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.