
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாள்கள் தாமதித்து அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியபோதும், போதுமான மழை இல்லை. இதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் உருவான நடா புயலும் எதிர்பார்த்த அளவு மழையைக் கொடுக்கவில்லை. நடா புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2-ஆம் தேதி கரையைக் கடந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயலுக்கு வர்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினத்துக்கு 1180 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல், தென்தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.