
TVK Vijay campaign : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறது. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கவுள்ள தவெக தலைவரும் நடிகருமான விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசவுள்ளார். அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டிமிட்டிருந்தார். ஆனால் தவெக தொண்டர்களின் அதிகளவு கூட்டத்தால் பல மணி நேரம் திருச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து மாலை 4 மணிக்கு 3 மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்த விஜய், இரவு 9 மணி வரை இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். இதனையடுத்து வருகிற 20ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் பகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு சொத்துக்களும் சேதம் ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்தக்கட்ட பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க போலீசார் தயங்கினார்கள். இந்த நிலையில் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 9 மற்றும் 15 ம் தேதிகளில் ல் டிஜிபி-யிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.