
Jayakumar pays tribute to Periyar : தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் கீழே உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருப்படத்திற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகநீதி தந்தை, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறோம். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் பெரியார் என தெரிவித்தார்.
மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடியவர். பெரியார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், மூடநம்பிக்கைக்கு எதிராக பேச்சுகள் ஒரு காலகட்டத்தில் மிக அளவிற்கு மோசமான மூடநம்பிக்கை இருந்தது அந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் பெரியார் என கூறினார். ஆதிதிராவிடர்கள், பழங்குடியின மக்கள், பின்தங்கியவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் அதற்கு அடிக்கோடிட்டவர் பெரியார் எனவும் தெரிவித்தார்.
சமூகநீதி, சமத்துவம், என இன்றைக்கும் உலகம் முழுவதும் போற்றப்படும் தந்தையாக பெரியார் இருக்கிறார். ஆனால் இன்றைக்கும் பெரியாரை விமர்சனம் செய்கிறார்கள் அவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போகும் நிலைமை வரும் எனவும் பெரியாரின் புகழ் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.