
Global City in Madurantakam : நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சென்னையில் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். எனவே ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள் கொண்டதாக புதிய நகரம்அமைய உள்ளது. “சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் குளோபல் சிட்டி அமைய திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் , அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் புதிய நகரத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புரச் சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகளும் இந்நகரில் இடம்பெறும் என தகவல்கள் கூறப்படுகிறது.