
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், எடப்பாடி அமித்ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பியிருந்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அவரிடம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமித்ஷாவை சந்தித்துள்ள இபிஎஸ், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் குறித்தும் அமித்ஷாவிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஆடிப்போன செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கோட்டையன் அடுத்து என்ன முடிவு எடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.