கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் தெரிவித்தனர். இதனால், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கொடநாடு வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கொடநாடு வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், அதற்கு திமுக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம்? முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
முன்னதாக, இந்த வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவரது சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்து பல்வேறு திடுக்கிம் தகவல்களை தெரிவித்து வருகிறார். அவருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரித்தும் உள்ளனர். ஆனால், அவர் சொல்வதில் உண்மை இல்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்திலும், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. கொடநாடு வழக்கில் சாட்சிகளைக் கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இடைக்கால தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம், அதனை நிரந்தர தடையாக மாற்றி தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆவணங்களை பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணை நவம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.