இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்நாட்டு சிறைகளில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி, ஜெகன் மூர்த்தி, பூமிநாதான் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையால்தான் 36 இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். 20 முதல் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் அவர்களை வயது மூப்பு, குடும்ப சூழ்நிலை, கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
அதன்பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்கள் கருத்துகளுக்கு எந்தவித மாறுபாடுகளை, வேறுபாடுகளை நாங்கள் எடுத்துச் சொல்ல தயாராக இல்லை. அவை அனைத்தையும் நாங்கள் முழுமனதோடு, இந்த அரசின் சார்பில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.
தமிழ்நாட்டுச் சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆராய வேண்டுமென்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையின்கீழ் 6 பேர் அடங்கிய குழுவை கடந்த 2021ஆம் ஆண்டு அமைத்ததாக முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மேலும், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் இதுதொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், இவர்களின் வழக்குகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாகவும் இக்குழு அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையினை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள்.” என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது உறுதி அளித்தார்.
மேலும், 13.9.2021ஆம் ஆண்டில் தாம் அறிவித்தவாறு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: அச்சத்தில் மலையாளிகள்!
அதேபோல், அறிவுரைக் கழக (Advisory Board) திட்டத்தின்கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவக் காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி 15 ஆயுள்தண்டனை சிறைவாசிகளும் ஏற்கனவே முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு, 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி பேசும் அதிமுக, 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? தர்மபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த அதிமுக ஆட்சியில் ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
“இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அ.தி.மு.க., இப்போது இசுலாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.