சாலை அமைக்கக் கோரி இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்…

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சாலை அமைக்கக் கோரி இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்…

சுருக்கம்

People struggle in railway track to build a road

சிவகங்கை

அகல இரயில் பாதை அமைக்கும்போது கௌல்கொல்லை பகுதியில் அகற்றப்பட்ட சாலையை மீண்டும் அமைக்கக் கோரி காரைக்குடி இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி – மயிலாடுதுறை இடையே அகல இரயில்பாதை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இப்பணியின்போது கௌல்கொல்லை என்ற இடத்தில் ஏற்கனவே இருந்த இரயில்வே கேட் மூடப்பட்டது.

அந்த வழியாகச் சென்ற சாலையும் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் கண்டனூர், புதுவயல் செல்லவும், பள்ளி, கல்லூரி, கோவில்களுக்குச் செல்லவும் வேறு பாதையில் சுற்றி செல்ல வேண்டும். அல்லது தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதேபோல் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கும் இந்த இரயில் தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் இரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்தது.

இந்த நிலையில் நேற்று கௌல்கொல்லை பகுதி மக்கள், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி, புதுவயல் நகர காங்கிரசுத் தலைவர் அமீர் ஆகியோர் தலைமையில், அகல இரயில் பாதை அமைக்கும் பணியின்போது கௌல்கொல்லை பகுதியில் அகற்றப்பட்ட சாலையை மீண்டும் அமைக்கக் கோரி இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் போது, தண்டவாளத்தில் சல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரியையும் அவர்கள் மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி தாசில்தார் கண்ணன் மற்றும் இரயில்வே அதிகாரிகள் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தால் போராட்டம் கைவிடப்பட்டது. மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். லாரியும் விடுவிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

பயன்பாட்டுக்கு வராத பயனற்ற ஓய்வூதிய திட்டம்..! அரசு ஊழியர்களை ஏமாற்ற முடியாது.. அன்புமணி கொந்தளிப்பு
நானும் ரவுடிதான் என்பது போல் நான் தான் கூட்டணிக்கு தலைவர் என்கிறார் பழனிசாமி.. முதல்வர் செம கலாய்..