
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மீண்டும் சாராயக் கடை திறக்கப்பட்டதால் கோபமடைந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சந்தை வீதியையொட்டி உள்ளது பள்ளப்பகுதி. இந்தப் பகுதியைச் சுற்றிலும் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி மற்றும் மசூதி போன்றவை உள்ளன.
இந்தப் பள்ளப்பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் சாராயக் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் அந்த டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்டதை அறிந்த குடிகாரர்கள் கூட்டம் கூட்டமாக சென்று சாராயத்தை வாங்கி குடித்து வருகின்றனர்.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், வியாபாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படும் என்று கூறி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நேற்று கடை திறக்கப்படுவதற்கு முன்பே அந்த கடையை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அப்துல்கறீம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளர் திருமால், உதவி ஆய்வாளர் சம்பத் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று டாஸ்மாக் சாராயக் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உங்களுடைய கோரிக்கைகளை வருவாய் துறையினரிடம் மனுவாக கொடுங்கள், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் கூறியதையடுத்து மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.