
திருவள்ளூர்
மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிக் கேட்டு 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேப்பம்பட்டு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா.
அவரின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
நேற்று அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வேப்பம்பட்டு இரயில் நிலையம் அருகே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காலை 9 மணியளவில் மாணவ, மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் திடீரென வேப்பம்பட்டு இரயில் நிலையத்திற்குள் சென்று திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இரண்டு புறநகர் மின்சார இரயில்களை மறித்தனர். இரயிலின் முன்பு நின்றுக் கொண்டு மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற மின்சார இரயில்களும், திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார இரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த இரயில்வே காவலாளர்கள் விரைந்து வந்து இரயில் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை சமாதானம் செய்ய முயற்சித்தபோது காவலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு செவ்வாப்பேட்டை காவலாளர்கள் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இரயில் மறியலை கைவிட்டு மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.