
திருப்பூர்
கடும் வெயிலிலும் குடை பிடித்துக் கொண்டு திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பூரில் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் குமரேசன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் நிஷார் அகமது ஆகியோர் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது கோரிக்கைகள் குறித்து வானத்தை முட்டும் அளவிற்கு முழக்கமிட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பெண் அரசு ஊழியர்கள் குடைகள் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தையொட்டி அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து பாதிக்காமல் இருப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் முன் காவலாளர்கள் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர்.