
தூத்துக்குடி
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை இடைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தேவைக்காக தாலுகா அலுவலகம் வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் போன்றவை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மட்டும் பணிக்கு வந்தார். மற்ற ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடியது.
இதனால் பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்த மக்கள் தங்கள் பணிகள் முடியாத வருத்தத்துடனும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருச்செந்தூர், திருவைகுண்டம், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதனைக் கண்டித்தும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, புதிய ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தியும், மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ராஜையா, ராமையா, ஐ.என்.டி.யு.சி. தலைவர் ராஜசேகர் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.