
திருவாரூர்
நீட் தேர்வை எதிர்த்து போராடுபவர்கள் காவல்துறையிடம் முன் அனுமதி பெற்றால் மட்டுமே போராட வேண்டும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கல்லூரி முதல்வர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நீட் தேர்வுக்காக நடைபெறும் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில், ஆட்சியர் இல.நிர்மல்ராஜ், “நீட் தேர்வுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியலில் ஈடுபடுவோர் அமைதியான முறையில் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் நடத்த உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவியர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைதியான முறையில் மட்டுமே போராட வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டம் பொது அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது அமைப்பினர், காவல்துறையிடம் முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
பெண் கல்வி நிறுவனங்களில், பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன வளாகத்திற்குள் அமைதியான முறையில் போராடலாம்.
ஒரு கல்வி நிறுவனத்தில் போராட்டம் நடந்தால் அக்கல்வி நிறுவன மாணவர்கள் மட்டுமே போராட வேண்டும். பிற கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்கவோ அல்லது வெளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவோ அனுமதிக்கக் கூடாது.
போராட்டம் நடக்கும் கல்வி நிறுவனத்தில் மற்ற வகுப்புகளுக்கோ, அங்கு நிகழும் நிகழ்ச்சிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
இதில் விதி மீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன தலைமை ஆசிரியர், முதல்வர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தவிர ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்புகொண்டும் தகவல் தெரிவிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகோபால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்சன், கோட்டாட்சியர் இரா.முத்துமீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர்.