
திருவள்ளூர்
பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய வேளாண் பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் துரை.ஜெயவேலு, மாவட்டச் செயலாளர் குபேந்திரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருந்த வட்ட நில அளவை சார் ஆய்வாளர் சூரியநாராயணனிடம் பாமக-வினர் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பின்னர், வந்திருந்த அனைவரும் அங்கிருந்து தாமாகவே கலைந்து சென்றனர்.