
தேனி
தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சினம் கொண்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், தாமரைக்குளம் பேரூராட்சிப் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 15-ஆவது வார்டு பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த இப்பகுதி மக்கள் சினம் கொண்டு தேனி - பெரியகுளம் சாலையில் கல்லூரி விலக்குப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அப்போது, “15 வது வார்டு பகுதிக்கு உடனே தண்ணீர் வழங்கப்படும்” என உத்தரவாதம் கொடுத்ததையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.