
திருநெல்வேலி
கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக போராடிய கூடங்குளம் பகுதி மக்களுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
“கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நெல்லை மாவட்டத்தின் கடலோர மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் அணு உலை பூங்கா என்று மொத்தம் 6 அணு உலைகள் அமைக்க வேலை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது 350–க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகும் கூட, வழக்குகளை திரும்பப் பெறவில்லை.
இந்த வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்த வழக்குகளை காரணம் காட்டி, அந்த பகுதி இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க மறுக்கிறார்கள்.
எனவே, கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.