
திருநெல்வேலி
இரண்டு வெவ்வேறு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாராயக் கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், சாராயக் கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மேலும், மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
அப்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திரண்டுவந்து முற்றுகையிட்டனர். அவர்கள், சாராயக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதன்பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், “திப்பணம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த சாராயக் கடைக்கு எதிராக கடந்த 1-ஆம் தேதி முதல் நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த கடை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த கடையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஆட்சியர் இதில் தலையிட்டு சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் திப்பணம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும் சாராயக் கடை திறக்க கூடாது என்ற கிராமசபை கூட்ட தீர்மானத்தை திருத்தம் செய்த பஞ்சாயத்து அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து, சங்கர்நகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “தாழையூத்து இரயில் நிலையம் அருகில் இரண்டு சாராயக் கடைகள் உள்ளன.
இங்கு குடியிருப்புகள், கடைகள், திருமண மண்டபங்கள், நாரணம்மாள்புரம் நகர பஞ்சாயத்து அலுவலகம், ரேசன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம், இரயில் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இங்குள்ள சாராயக் கடைகளுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வதால் மக்களுக்கு இடையூறாக உள்ளது.
எனவே இந்த இரண்டு சாராயக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது..