
திருச்சி
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காகதான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறது என்று பழ.நெடுமாறன் உண்மையை போட்டுடைத்தார்.
தமிழ் தேசிய வீர சங்கம் சார்பில் ஜம்புதீவு பிரகடன வரலாற்றுப் புரட்சி விழா நேற்று திருச்சி மாவட்டம், திருவரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருதுபாலா தலைமை வகித்தார். தமிழ் தேசிய வீர சங்க ஆலோசகர் முருகேசன் வரவேற்றார். தமிழ் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், கொங்கு மண்டல இளைஞர் பேரவை தனியரசு எம்.எல்.ஏ. சுடர்மதி ஆகியோர் பேசினர்.
இந்த விழாவில் ஜம்புதீவு பிரகடன புகைப்படம் மற்றும் சி.டி. வெளியிடப்பட்டது.
பின்னர் தமிழ் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசியது:
“இந்தாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நமது விவசாயிகள் சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.
அரசியல் காரணங்களுக்காக, நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது.
இந்த பிரச்சனையில் நமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால் தமிழகத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று அவர் பேசினார்.
விழாவில் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து நன்றித் தெரிவித்தார்.