
தஞ்சாவூர்
மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்டனர. சமாதனம் பேசவந்த அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் பழைய குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன.
அதன்பிறகு தஞ்சாவூர் மாநகராட்சியின் 2, 3-வது வார்டுகளுக்கு உட்பட்ட கரந்தை, பூக்குளம், பூக்கொல்லை, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனை நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து முறையிட்டனர். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள கரந்தையில் நேற்று காலை வெற்றுக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், பெரிய இரும்பு குழாயை சாலையின் குறுக்கே போட்டு குடிநீர் இல்லாதபோது குழாய் மட்டும் எதற்கு என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த மறியலால் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த மேற்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராஜகோபால் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்த மக்கள், "மாநகராட்சி அதிகாரிகள் இங்கே வர வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யப்பட்டால் தான் மறியலை கைவிடுவோம்" என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர்.
இதை கேட்டு கோபமடைந்த பெண்கள் சிலர், "இப்படி தான் பலமுறை தெரிவித்துவிட்டு சென்றீர்கள். ஆனால், குடிநீர் மட்டும் வரவில்லை" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் வந்து மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர்.
அந்த உறுதிமொழியை ஏற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.