
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருதால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலால் கருகிய தேயிலைச் செடிகள் இந்த தொடர் மழையால் துளிர்விடத் தொடங்கியுள்ளன.
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையார் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளதால் பருவமழை கூடுதலாக கிடைக்கும் என்று பொதுப்பணித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த மழை காரணமாக வால்பாறை மலைப்பகுதிகளுக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளிப்பகுதியில் உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 73 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து 28.45 அடியாக உள்ளது.
இந்நிலையில் வால்பாறையில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.