சூப்பர் நியூஸ் !! இனி அரசுப் பேருந்துகளில் பார்சல் அனுப்பலாம்.. எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு கட்டணம்..?

By Thanalakshmi VFirst Published Aug 3, 2022, 1:14 PM IST
Highlights

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய மார்க்கத்தில் தங்களது பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. 
 

அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையிலும் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமைப் பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் அதன்படி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய மார்க்கத்தில் தங்களது பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பார்சல்களை அனுப்ப சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விரைவுப் போக்குவரத்து கழக அலுவலகங்களை தொடர்பு கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வரும் பார்சலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

பேருந்தில் உள்ள சுமைப் பெட்டிகளுக்கு, மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், இந்த பார்சல் சேவை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரியை விட குறைவாக பார்சல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பார்சல் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 80 கிலோ வரையிலான பார்சல்களுக்கு தினசரி திருச்சி முதல் சென்னை வரை ரூ.210, ஓசூர் முதல் சென்னை வரை ரூ.210, மதுரை முதல் சென்னை வரை ரூ.300, நெல்லை முதல் சென்னை வரை ரூ.390, தூத்துக்குடி முதல் சென்னை வரை ரூ.390, செங்கோட்டை முதல் சென்னை வரை ரூ.390, கோவை முதல் சென்னை வரை ரூ.330, கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியாக 18 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் விதிக்கப்படுகிறது

மேலும் படிக்க:காவிரி கரையோரங்களில் சிறப்பாக நடைபெற்ற ஆடிபெருக்கு விழா.. ஏராளமான மக்கள் குவிந்து புனித நீராடல்

இதே போல சென்னையில் இருந்து ஊர்களுக்கு பார்சல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 7 நகரங்களுக்கும் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும் போது பயனாளர்களுக்கு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மாநகர பேருந்து பாஸ் போல், பொருட்கள் அனுப்பப்படும் தேதிகளில் அந்த பாஸில் டிக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!