டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ்க்கு நிம்மதி கொடுத்த உச்சநீதிமன்றம்.. சிபிஐ விசாரணைக்கான உத்தரவு ரத்து

By Ajmal KhanFirst Published Aug 3, 2022, 1:02 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

இபிஎஸ் மீது டெண்டர் முறைகேடு

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதே போல அறப்போர் இயக்கமும் புகார் கூறியிருந்தது.   எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு டெண்டர் வழங்கியதாகவும் இதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்

இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் விசாரனை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், உயர்நீதிமன்றம் எந்த கருத்தையும் கேட்காமல் ஒருசாரரின் கருத்தை கேட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

சிபிஐ விசாரணை ரத்து

இதனையடுத்து தலைமை நீதிபதி இந்த வழக்கில் எதிர்மனுதாரரான  ஆர்.எஸ்.பாரதி சி.பி.ஐ விசாரணை தான் வேண்டும் என்று  கோருகிறீர்களா ? என வினவினர் அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை சி.பி.ஐ தான் விசாரணை செய்ய வேண்டுமென்று இல்லை, ஆனால் சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெற வேண்டும் என்பதே, அது எந்த அமைப்பாக இருந்தாலும் ஆட்சேபம் இல்லை என கூறினார். இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான    டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து  செய்து உத்தரவிட்டது. அதேவேளையில்  இந்த விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   விசாரணை அறிக்கையை முதலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர ஆய்வு செய்து, அதன்பின்னர் வழக்கை விசாரித்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக வழக்கை விசாரித்த பின்னர் இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யலாம் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது

இதையும் படியுங்கள் 

பயமுறுத்தும் முறைகேடு வழக்கு.. எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்கும் அதிரடி முடிவு !

 

click me!