
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. எனவே அடுத்த தேர்தலுக்கு முன்னதாக அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.
ஏற்கனவே நான் உட்பட 6 முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என பொதுச் செயலாளரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். கட்சியின் பொதுச் செயலாளர் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். 10 தினங்களில் இதனை செய்யாவிட்டால் அந்த பணியை நாங்கள் மேற்கொள்வோம்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களில் பலர் எங்களுக்கு எந்தவித பொறுப்பும் தேவை இல்லை. கட்சியில் இணைந்து பயணிக்க விரும்புகிறோம் என சொல்லிவிட்ட பின்னரும் அவர்களை இணைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பை பார்த்து உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி தனது ஆதரவாளர்கள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக அமர்ந்து செங்கோட்டையனின் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்ததாக சொல்லப்படுகிறது.