சென்னையை உதகை ஆக்கிய பெய்ட்டி புயல் !! ஆந்திராவில் இன்று கரையைக் கடக்கிறது… தமிழகத்தில் மழை இல்லை !!

By Selvanayagam PFirst Published Dec 17, 2018, 8:38 AM IST
Highlights

பெய்ட்டி  புயல் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால்  சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. சென்னையில் தொடர்ந்து  குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் உள்ளது. அதே நேரத்தில் இன்று பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே கரையைக் கடப்பதால் தமிழகத்தில் வட மாவட்டங்களில்  ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லிக் கொள்ளும்படி மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர தொடங்கி இருக்கிறது. இந்த ‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது. இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய , சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் , தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘பெய்ட்டி’ புயல் தற்போது சென்னையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெற கூடும். மேலும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும்-காக்கிநாடாவுக்கும் இடையே 17-ந்தேதி (இன்று) பிற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று  கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

சென்னைக்கு புயல் நிலைகொண்டு இருப்பதால் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். புயல் நகர்ந்து செல்லும்போது சாரல் மழையோ அல்லது மிகுதியான காற்றோ வீசலாம். தமிழகத்தை பொறுத்தவரை பெரிய மழைக்கு வாய்ப்பு எதுவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பெய்ட்டி’ புயல் நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுகிறது.

புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகறது.  கடலூரிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

click me!