கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை… சட்ட ஒழுங்கை காக்க போலீஸார் நடவடிக்கை!!

By Narendran SFirst Published Jul 23, 2022, 12:08 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்தப் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இதுக்குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாணவியின் தந்தை தரப்பில் மருத்துவர்கள் நிய மிக்கப்படாத தால், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர்கள் குழு, மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தது. மறுபிரேத பரிசோதனை செய்த உடலை ஸ்ரீமதி பெற்றோரை வாங்கிக் கொள்ள உத்தரவிட கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...!கெடு விதித்த நீதிமன்றம்..! ஶ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த பெற்றோர்..

அதற்கு நீதிபதி, மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும். அதை படித்து பார்த்து அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவு நகலை மாணவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர். அதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர், மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞரிடம், இந்த உயர்நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? மகளை இழந்த மனுதாரர் ராமலிங்கம் மீது அனுதாபம் உள்ளது. அதற்காக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற தாமதம் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகி றேன். அவ்வாறு பெற்றுக் கொள்ளா விட்டால் காவல் துறை சட்டப்படி இறுதி சடங்குகளை நடத்தலாம்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்.. பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்..? விசாரணையில் பகீர் தகவல்

எனவே, உடலை எப்போது பெறுவீர்கள் என்ற விவரத்தை இன்று 12 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் ராம லிங்கத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது தந்தை ராமலிங்கம் சம்மதம் தெரிவித்துள்ளார். மாணவியின் உடலை நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெற்றுக் கொள்கிறோம். மாலைக்குள் இறுதி சடங்கு செய்து முடிப்போம் என்று உத்தர வாதம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதை அடுத்து மாணவியின் உடலுக்கு நாளை காலை அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதி சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் இறுதிச் சடங்கில் வெளியூர் ஆட்கள், அமைப்புகள் கலந்துக்கொள்ள கூடாது எனவும் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டும் பங்கேற்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.

click me!