திமுக அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது..! போட்டுத் தாக்கிய ஓபிஎஸ்!

Published : Nov 14, 2025, 05:22 PM IST
OPS vs MK Stalin

சுருக்கம்

திமுக அரசின் அலட்சியப் போக்கு, கையாலாகாத்தனம் காரணமாகவே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவின் கையாலாகாத்தனம்

இது தொடர்பாக ஓபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை பறித்திடும் வகையில் கர்நாடக அரசு தயாரித்துள்ள மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினை, அக்கறையின்மையை, கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால், மழைப் பொழிவு குறைவு என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பினை கர்நாடக அரசு செயல்படுத்தாத நேர்வுகள் தான் அதிகம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

வாதங்களை ஆணித்தரமாக வைத்திருக்க வேண்டும்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தராமல் உபரி நீரை மட்டுமே திறந்துவிடுவதை கர்நாடக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, காவேரி மேலாண்மை வாரியத்திடமும், காவேரி ஒழுங்கு முறை குழு முன்பும் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்த போது, வலுவான வாதங்களை தமிழ்நாடு அரசு சார்பில் ஆணித்தரமாக வைத்திருக்க வேண்டும்.

இப்படி வாதம் வைத்திருக்க வேண்டும்

ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாத நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் கூடுதலாக 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தேக்கி வைத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதன் மூலம் பில்லிகுண்டுவுக்கு வரும் காவேரி நீரின் ஆதாரமாக விளங்கும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறையும் என்பதையும், மேகதாது அணைத் திட்டம் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் செயல் என்பதையும், இது காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் நோக்கத்தை சீர்குலைக்கும் செயல் என்பதையும் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் எடுத்துரைத்திருந்தால், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிச்சயமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும்.

மிகப்பெரிய அநீதி

காவேரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான முந்தைய நிலைப்பாடுகளை உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு பட்டியலிட்டிருக்குமேயானால், விரிவான திட்ட அறிக்கையை பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் நிச்சயம் உத்தரவிட்டு இருக்காது.

தி.மு.க. அரசின் திறமையின்மை காரணமாக, வலுவான வாதங்களை முன்வைக்காததன் காரணமாக மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை சேர்ந்த வல்லுநர்கள் பரிசீலிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி.

மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை பரிசீலனை செய்யப்படும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீட்டு மனு அல்லது மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து, காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி